Skip to main content

”ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்...” - எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

"Governor should be withdrawn ..." - STBI State President Nellai Mubarak

 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஜூன்.04 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. 'ஆளுநரே வெளியேறு' என்ற முழக்கத்துடன் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

 

கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் தொடங்கிய இந்த பேரணியில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வீரபாண்டியன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் முகமது சேக் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் வழ.ராஜு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

 

மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், அகமது நவவி, மாநில செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழ.ராஜா முகம்மது, பஷீர் சுல்தான், கமால் பாஷா, முகமது ரஷீத் மற்றும் சென்னை வடக்கு, தெற்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில் பெண்கள், குழந்தைகள் உள்பட  20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

 

"Governor should be withdrawn ..." - STBI State President Nellai Mubarak

 

பேரணியில் உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், "நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து, ‘ஒரே நாடு ஒரே அமைப்பு’ என அனைத்து முனைகளையும் வலிந்து மையப்படுத்தும் எதிர்மறை ஏற்பாடுகளை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு மிக வேகமாக செய்துகொண்டிருக்கிறது. நாட்டின் கூட்டாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகின்றது.

 

அதன் ஒருபகுதியாக  தாங்கள் நியமிக்கும் ஆளுநர்களைக் கொண்டு ஒரு மாநில அரசுகளின் செயல்பாடுகளை தடுத்து வைப்பது, மாநில அரசின் உரிமைகளை தர மறுப்பது என்பன போன்ற கூட்டாட்சிக்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பின்னர், அவரின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே ஆளுநர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.


ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன.


மக்களுக்கான மசோதாக்களை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடும் மாநில அரசை மதிக்காத போக்கு, கல்வியில் சமூகநீதியை சீர்குலைத்து குலக்கல்வியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையின் பரப்புரை சக்தியாய் வலம்வருவது, பாசிச இந்துத்துவ சித்தாந்த கொள்கைப் பிரச்சாரங்களை மேடையேற்றுவது, சமூக ஜனநாயக அமைப்புகள் குறித்த அவதூறுகளை மேற்கொள்வது உள்ளிட்ட தமிழர் விரோத நடவடிக்கைகள் தமிழக ஆளுநரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு இந்த பேரணி. 


தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை முடக்கும் ஆளுநரின் இதுபோன்ற விரோதப் போக்கு நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஆளுநரை திரும்பப்பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்