நலதிட்ட உதவிகள் வழங்குதல், பட்டமளிப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (28.01.2024) முதல் நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு சென்று கடந்த 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து உயிர் தப்பிய தியாகி பழனிவேலை (வயது 83) சந்தித்துப் பேசினார்.
மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா இன்று (29.01.2024) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவரிடம் இருந்து 134 பேர் முனைவர் (Phd) பட்டமும், 184 பதக்கம் பெற்ற பட்டதாரிகள் என 348 பேர் நேரடியாக பட்டம் பெற்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு இன்று மதியம் 02.45 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநரின் நேரமின்மை காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆளுநரின் வருகையை எதிர்த்து புதுக்கோட்டையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.