இந்திய நாட்டின் 73- வது குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசுத் தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல் முறையாகும். ஆளுநர் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மூவர்ணக் கொடி மீது மலர்கள் தூவப்பட்டன.
அதைத் தொடர்ந்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர். கரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு குடியரசுத் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டன. அதேபோல், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மெரினாவில் விழாவை காண மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
டெல்லி அணி வகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி உள்பட நான்கு ஊர்திகள் சென்னை அணிவகுப்பில் இடம் பெற்றன. அணி வகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் சிலைகள் இடம் பெற்றுள்ளன. வ.உ.சி., வீரபாண்டிய கட்ட பொம்மன், வீரன் அழகு முத்துக்கோன் உள்ளிட்டோரின் சிலைகள் உள்ளன.
பெரியார், ராஜாஜி, காமராஜர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், உள்ளிட்டோரின் சிலைகளும் இடம் பெற்றுள்ளன. அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்தி இடம் பெற்றது.
சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.