தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து,… pic.twitter.com/EzYTtXvxwM— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024