Skip to main content

முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு!

Published on 15/10/2024 | Edited on 15/10/2024
Governor R N Ravi Praise To the Govt of Tamil Nadu on precautionary measures

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (15.10.2024) வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரத்திற்கு நாளை (16.10.2024) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (14.10.2024) இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. முன்னதாக சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார். அதோடு சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டிருந்தார். மேலும், அதி கனமழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்துள்ளது. அடுத்த 2 நாளுக்கு மழைப் பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அனைத்து விதமான சாத்தியமான வழிகளை தமிழக அரசு செய்து வருகிறது. மழைப் பாதிப்புகளைத் தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்