இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, மத்திய அரசின் இத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அருணாசலப்பிரதேச ஆளுநர் பி.டி. மிஸ்ரா ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "அக்னிபத்' திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்சனைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுநர் பங்கேற்பதற்கு இடம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.