"ஆட்சியின் லட்சணம் பருவ மழை வந்தால் தான் தெரியும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு இந்த அரசை பற்றி பயம் இல்லை. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு தைரியம் இல்லை. மக்களின் எதிர்பார்ப்பு என்பது அடிப்படை கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு. அப்படி இருக்கிறதா இன்னைக்கு? பேப்பர் திருப்பி பார்த்தால் ஆங்காங்கு பெட்ரோல் குண்டு வீச்சு செய்திகள். இந்த மாதிரி வெடிகுண்டு கலாச்சாரங்கள், கத்திக் கலாச்சாரங்கள், கஞ்சா கலாச்சாரங்கள், சூதாட்ட கலாச்சாரங்கள் சர்வ சாதாரணமாக திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டுள்ள போது பொதுமக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள்.
பருவமழை ஆரம்பித்த சூழலில், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இவர்கள் தோண்டிய பள்ளங்களே எமனாக மாறும். முதலமைச்சர் கொளத்தூர் தொகுதியை மட்டும் காப்பாற்றினால் போதும் என நினைக்கிறார். முதலமைச்சர் என்றால் 234 தொகுதிகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம் தானே பார்க்க வேண்டும். ஆட்சியின் லட்சணம் பருவ மழை வந்தால் தான் தெரியும். பொதுச்செயலாளர் தேர்வு குறித்து உரிய தகவல் தெரிவிக்கப்படும்” எனக் கூறினார்.