தமிழகத்தை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து புறக்கனித்தால் 90 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் பேசினார்.
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் நோக்கில் அமைந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையையும், ஒன்றிய அரசையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சார்பாக மணிக்கூண்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாவட்ட அவைத்தலைவர்கள் வழக்கறிஞர் காமாட்சி, மோகன், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாணார்பட்டி விஜயன், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாநகர திமுக செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா, வரவேற்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. வேலை வாய்ப்பு முதற்கொண்டு நலத்திட்டங்கள் வரை தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆதரவு தந்த மாநிலங்களுக்கு நிதிகளை வாரி வழங்கியதோடு மானியமாகவும் நிதிகளை அளித்துள்ளது. வெள்ளம் மற்றும் புயல் சேதங்களுக்காக நாம் 37 ஆயிரம் கோடி சேதம் கேட்டபோது நமக்கு 275 கோடிகள் மட்டும் வழங்கினார்கள். 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை தமிழக மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஜி.எஸ்.டி. வரியிலிருந்து நமக்கு வேண்டிய 20 ஆயிரம் கோடியிலிருந்து நமக்குரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. 2வது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நமது தலைவர் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க நினைத்த போது அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மருத்துவ கனவோடு படிக்கும் மாணவர்களுக்கு நீட் என்னும் தேர்வை கொண்டு வந்து தமிழக இளைஞர்களின் மருத்துவக் கனவை சீரழித்தார்கள். அதன் பின்பு கியூட் என்னும் தேர்வை கொண்டு வந்து கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவர்களின் கனவையும் ஒன்றிய அரசு சீரழிக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. மணிப்பூர் பற்றி எரிந்தபோது அந்த மாநிலத்தை திரும்பி பார்க்காத பிரதமர் இந்திய மக்களின் நலனில் அக்கறை உள்ளவரா? . தமிழகத்தை புரட்டி போட்டது போல் வெள்ள சேதம் ஏற்பட்ட போது திமுக தலைவர் அதை சமாளித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைத்து மீண்டும் அப்பகுதி மக்களை இயல்பான நிலைக்கு கொண்டு வந்து செயல்படுத்தி இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
ஒன்றிய அரசின் அமைச்சர்கள் அமித்ஷாவும், நிர்மலா சீத்தாராமனும் வெள்ள சேதத்தை பார்க்க வந்தவர்கள் கோவில் கோவிலாக சென்று விட்டு நிதி ஒதுக்கீடு செய்யாமல் திரும்பி சென்றுவிட்டார்கள். நானும் தமிழ்நாட்டுகாரிதான் என மார்தட்டி சொல்லும் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை புறக்கணித்து நிதிநிலை அறிக்கை வெளியிட்டதன் மூலம் இவர் தமிழ் நாட்டில்தான் பிறந்தாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 'கோ பேக் மோடி' என்று அன்று சொன்னோம். இன்று தமிழக மக்கள் அனைவரும் கோ பேக் மோடி என்ற சொல்லும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியதால் ஒன்றிய அரசு மைனாரிட்டி அரசாக செயல்படுகிறது. அந்த கோபத்தை தமிழக மக்கள் மீது காட்டும் விதமாக நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியுள்ளது பாஜக. தொடர்ந்து தமிழகத்தை பாஜக அரசு புறக்கணித்தால் 3மாத காலம்தான் அதன்பின்பு இந்திய கூட்டணி சார்பாக பட்ஜெட் போடும் நிலை உருவாகும். இதை உணர்ந்து ஏழை எளிய மக்களை பழிவாங்காமல் பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற நோக்கில் செயல்பட்டு நிதியை மாநிலங்களுக்கு பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்'' என்றார்.