உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களின் மீட்புப் பணிகளுக்காக ரூபாய் 3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்களை அழைத்து வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானத்தில் தமிழகம் அழைத்து வர ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல், மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட எம்.பி.க்கள் குழு செலவுக்கு ரூபாய் 1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 3.5 கோடி நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் 181 பேர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழக மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். சென்னை திரும்பிய மாணவர்கள் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழகம் திரும்ப பாஸ்போர்ட் மற்றும் முகவரியுடன் 2,221 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவுச் செய்யப்படாமல் 5,000- க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.