திரைப்பட இயக்குநரும், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளருமான வ.கவுதமன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரிடம் கடந்த சனிக்கிழமை (07.08.2021) அன்று மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், "கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது நூறாண்டை கடந்த வரலாற்றுக்கு சொந்தமானது. இப்பள்ளியானது திட்டக்குடி வட்டத்திலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை மிகுந்த தரத்தோடு படிக்க வைத்து உலகம் முழுக்க பல உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிற எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கி அனுப்பியிருக்கிறது.
ஆங்கிலப் பள்ளிகளுக்கு சவாலாக இயங்கிக் கொண்டிருந்த இப்பள்ளியில் தலைமையாசிரியர் அலுவலகம், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் என தனித்தனி கட்டடங்களில் இயங்கிக் கொண்டிருந்தது. வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் என ஒவ்வொன்றுக்கும் தனியாக பரிசோதனை கூடங்கள் இருந்தன. கபடி, கைப்பந்து, கோ கோ, கால்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கென அழகழகான மைதானங்கள் இருந்தன. பிற பள்ளிகளின் விளையாட்டு போட்டிகள் இப்பள்ளியில் நடத்தப்பட்டது.
இவ்வாறு எண்ணற்ற சிறப்புகளுடன் இயங்கிய பள்ளியின் இன்றைய நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. தலைமையாசிரியர் கட்டடம் தவிர அனைத்து கட்டடங்களும் மிகவும் பாழடைந்து, இடிந்து யாரும் உள்ளே போக முடியாத அளவிற்கு பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. அதுபோல் பள்ளி கட்டடத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் இடையில் கழிவு நீர் கால்வாய் ஓடி மைதானத்தை யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றத்தோடு கிடக்கிறது. மேலும் விளையாட்டு மைதானம் பாதுகாப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. விளையாட்டு பொருட்களும், கருவிகளும் உடைந்து பயனில்லாமல் கிடக்கிறது. எனவே, தாங்கள் தனி கவனம் செலுத்தி பள்ளியினை சீரமைத்து, கழிவு நீர் கால்வாயினை அகற்றி, விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சீர்செய்து எம் வரலாற்றுக்குரிய பள்ளியை மீண்டும் ஒரு பெரும் வரலாறு படைக்கும் பள்ளியாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு கொடுத்த அடுத்த நாள் (08.08.2021) கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அமைச்சரும், திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன் ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று உடனடியாக பள்ளியை பார்வையிட்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இயக்குனர் கவுதமன், “திட்டக்குடி அரசு மேல்நிலை பள்ளி; நான் படித்த பள்ளி. பள்ளியின் அடிப்படை வசதிகள், சீர்கேடுகள் குறித்து கடந்த 7.8.2021 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரிடம் மனு அளித்தேன். மனு அளித்த அடுத்த நாளே, சரியாக 24 மணி நேரத்திற்குள்ளாக தமிழக முதலமைச்சர், அமைச்சர், தலைமைச் செயலாளர் உத்தரவின்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக பள்ளிக்கு சென்று பார்வையிட்டதுடன் மைதானத்திற்குள் பாய்ந்து கொண்டிருக்கும் சாக்கடை நீரை அகற்றுவதற்கும், பள்ளியைச் சுற்றியும், மைதானத்தை சுற்றியும் பாதுகாப்பு சுவர் எழுப்ப உத்தரவிட்டனர்.
இடிந்த கட்டடங்களை தகர்த்து புத்தம் புதிய கட்டடங்களை உருவாக்குவதற்கும் திட்டமிட்ட செய்தி அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தவிரவும் சமூக விரோதிகள் ஏற்கனவே பள்ளியில் நடமாடிக்கொண்டிருந்த நிலையில் பள்ளியின் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் இரண்டு காவலாளிகளை நிறுத்த முடிவு செய்த செயலும் வரவேற்கத்தக்கது. வரலாற்றை சுமந்த எமது திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மீண்டும் ஒரு பெரும் வரலாறாக மாறப்போகிறது என்பதை நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்வு கொள்கிறது.
அடுத்தக் கட்ட செயல்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் சில அதிகாரிகளை நியமித்து துரிதமாக நடக்கும் பள்ளி வேலைகளை மாதத்திற்கு இரண்டு முறை நேரில் வந்து பார்த்து தனக்கு அறிக்கை தருமாறு கட்டளையிட்டதையும் மகிழ்வோடு வரவேற்கிறோம். 24 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர் தலைமையிலான தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.
கவுதமன் மட்டுமல்லாது திட்டக்குடி பகுதி மக்களும், முன்னாள் மாணவர்களும் அரசின் இந்த நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டினர்.