
தந்தை பெரியார் நினைவு நாள் இன்று (24.12.2020), தமிழகம் முழுக்க அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டில், பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் பெரியாரின் முழுஉருவ வெண்கலச் சிலை, ஈரோடு தி.மு.க.வினரால் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பெரியாரின் நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள, அவரது சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க மாநில உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், முன்னாள் யூனியன் சேர்மன் எல்லப்பாளையம் சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது சிலைக்கு மாநிலத் துணை பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ்.எல்.பரமசிவம், எம்.பி.வெங்கடாசலம், மத்திய மாவட்டச் செயலாளர் பிரபு, மாநகரச் செயலாளர் ராசு, தொழிற்சங்கத் தலைவர் ராஜேந்திரன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டப் பொருளாளர் அரசாங்கம் தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர். அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல்ராமன் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுபோலவே அ.தி.மு.க.சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மற்றும் பெரியார் சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, பகுதிச் செயலாளர் பெரியார் நகர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.