கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுக்காவில் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதற்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிளைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால், வீடுகள், விவசாயப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. தாலுக்காவுக்கு உட்பட்ட கிராமங்களில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
அப்படி, கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள், மழையின் காரணமாகவும் நீண்ட நாட்களானதாலும் ஒவ்வொரு ஆண்டும் சிதிலமடைந்து தற்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளன. அந்த வீடுகளைக் கணக்கெடுத்து, அவைகளை புனரமைப்புச் செய்ய வேண்டும் அல்லது மோசமான வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அந்த வீடுகளில் குடியிருக்கும் மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். உதாரணமாக, ஆதமங்கலம், சாத்தநத்தம், தொளார் வையங்குடி, கோடங்குடி, செங்கமேடு உட்பட பல்வேறு கிராமங்களில், மேற்படி வீடுகளில், மழைநீர் உள்ளே கொட்டுவதால் குடியிருக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.
அப்படிப்பட்ட, மேற்படி வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. உதாரணமாக அப்படிப்பட்ட வீடுகளில் குடியிருக்கமுடியாமல் தவித்த செங்கமேடு கிராம மக்களுக்கு, அந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஊர் இளைஞர்கள் முகாம் அமைத்து தங்கவைத்து, அந்த மக்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுபோன்ற மோசமான வீடுகளைக் கணக்கெடுத்து, அதை சீர் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம், அந்த வீடுகளில் வாழும் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழக்க நேராமல் தடுக்க வேண்டும் என்று வீடுகளில் குடியிருக்கும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.