தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல அவசர அறிவிப்புகளை வெளியிடும் தமிழக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஊனப்படுத்தி சீர்குலைப்பதற்கும், 110 விதியைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள அறிவிப்புகளை திரும்ப பெறவேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூர் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் செவ்வாய் கிழமை மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு மத்திய செயற்குழு கூட்ட முடிவுகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
"கடந்த ஜனவரியில் (5 ஆம் தேதி) நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் போது அவை விதி 110 ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தலா 60 இலட்சம் மதிப்பீட்டில், 600 கோடியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து, ஊரக மகளிர் விற்பனை கூடங்கள் கட்டப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் விதத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசும், மாநில அரசும் போட்டுள்ள பல புதிய உத்தரவுகளால், ஏறக்குறைய ஓராண்டாக சரிவர வேலை கிடைக்காமல் கிராமப்புற ஏழைமக்கள் வறுமையில் வாடும் நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு 100 நாள் வேலையை முற்றிலும் சீர்குலைக்கும் பாதகச் செயலாகும். இது ஊரக வேலைச்சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறுவதும், நீர்த்துப்போகச் செய்வதுமான நடவடிக்கையாகும். ஒப்பந்தகாரர்களையும், இயந்திரப் பயன்பாட்டையும் பயன்படுத்துவது சட்டவிரோதம் என விதி கூறுகிறது.
ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள, தற்போது செயல்படுத்தப்படும் வேலைகளில் 10 சதவீதம் தொழிலாளர்களின் ஊதியத்திற்கும், 90 சதவீதம் பொருட்களுக்கான செலவினத்திற்கும் என்ற தன்மையில் உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஏறக்குறைய 300 பேர், 500 பேர் என ஒரு நாளைக்கு வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 பேர் 10 பேர் என கடுமையாக வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழக அரசு வேலைத்திட்டத்தை, பெரும்பகுதி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தற்போது போடப்பட்டுள்ள புதிய உத்தரவுகளையும், 110 விதி உத்தரவுகளையும் திரும்ப பெறவேண்டும். அதேபோல் தமிழக அரசால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட ரூ 24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில நிதியா அல்லது ஊரக வேலைத்திட்டத்தின் படி மத்திய அரசால் வழங்கப்படும் நிதியா என்பதனையும், அதைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் என்ன என்பதனையும் தமிழக அரசு உடன் விளக்கிட வேண்டும்.
நான்காவது ஆண்டாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் கை நடவு செய்யும் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், புறக்கணிக்கும் விதத்தில் எந்திரங்கள் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 4 ஆயிரம் மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ 40 கோடியை, அதாவது கிராமப்புற பெண் விவசாய தொழிலாளர்களுக்கு நடவு கூலியாக கிடைக்க வேண்டிய தொகையை இயந்திர நடவுக்கு வழங்கிட எடப்பாடி அரசு துடிப்பதற்கு விவசாய தொழிலாளர் சங்கம் கண்டனத்தை தெரிவிக்கிறது. ஆகவே கை நடவு செய்யும் விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ 4 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என திருத்தி அறிவிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் ஏ.லாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கூடி 31டிஎம்சி தண்ணீர் திறந்து விடவேண்டும் என அறிவித்தது. கர்நாடக அரசு தாங்கள் ஏற்கனவே திறந்து விட்டதாக கூறுகிறது. அப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டாலும் கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இருக்காது. எனவே மழை பெய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விவசாயத்தை தொடங்கும் விதமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயத்தை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள 31 "டிஎம்சி தண்ணீர் கிடைக்க உரிமை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு மானியமாக 40 கோடி தமிழக அரசு அறிவித்துள்ளது. இயந்திர நடவு மானியம் காரணமாக டெல்டாவில் உள்ள 18 இலட்சம் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இயந்திர நடவு மானியத்தை வாபஸ் பெற வேண்டும். கை நடவு தொழிலாளர்களுக்கு தரவேண்டும்.
விவசாய தொழிலாளர்களுக்கு ரூ 24 கோடி நூறுநாள் வேலைத்திட்டத்திற்கென ஒதுக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. அரசு முழுமையான அறிவிப்பை தெளிவாக அறிவிக்கவேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்களை திரட்டி வரும் ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.