பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக துவங்கப்பட்ட திட்டம் ‘இமைகள்’. இந்தத் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சிதம்பரம் காவல்துறையினர் முடிவெடுத்தனர். அதற்காக நேற்று, சிதம்பரம் நகரத்தில் உள்ள அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரயிலடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை உள்ள 50 மாணவிகள் அவர்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் சிதம்பரம் காவல் நிலையத்திற்கு பேருந்துமூலம் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களைப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன், காவல் உதவி ஆய்வாளர்கள் பரணிதரன், லட்சுமிராமன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜா மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஜெயசீலி, திரிபுரசுந்தரி உள்ளிட்ட காவல்துறையினர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்குக் காவல் நிலையத்தில் என்ன மாதிரியான பணிகள் நடைபெறுகிறது. காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்களின் செயல்பாடுகள், குற்றவாளிகளை எந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்கள். வழக்குகள் எப்படி பதிவு செய்யப்படுகிறது, குற்றம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மாணவிகளிடம் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி பேசுகையில், மாணவிகள் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை நினைத்துக் கல்வி கற்க வேண்டும். இளம் வயது திருமணம் செய்தால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதையும், இளம் வயது திருமணத்தைத் தவிர்க்க வேண்டும். மேலும் பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்தும் பாலியல் குற்றம் நடைபெற்றால் அதனை 1098 என்ற இலவச தொலை பேசிமூலம் காவல்துறையினருக்கு தெரிவிப்பது, சக மாணவிகளைப் பாலியல் குற்றத்திலிருந்து பாதுகாப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவிகள் அனைவரும் பேருந்து மூலம் அவர்களின் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில் காவல்நிலையம் மற்றும் காவல்துறையினர் என்றால் அச்சத்துடன் பார்த்து வந்தோம். தற்போது காவல்நிலையத்திற்கு வந்து அதன் செயல்பாடுகள், காவல்துறைனிரின் பணிகள் குறித்து அறிந்த பிறகு நாமும் இவ்வாறு வந்து பணிசெய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. இது போன்று அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது என்றனர்.