
அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் தான் கற்றுக் கொண்ட ஓவியக்கலையை கரோனா விடுமுறைக் காலங்களில் பள்ளிச் சுவர்களில் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ளது சிலட்டூர் கிராமம். சமூக விழிப்புணர்வு கொண்ட இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் பாவேந்தன். இந்த மாணவன், தான் பள்ளி சுவர்களில் ஏராளமான ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி வைத்திருக்கிறார். இந்த மாணவன் வரைந்த ஓவியங்கள் பற்றி, அவரது பள்ளி ஆசிரியர் கார்த்திக் சமூக வலைதளங்களில் பதிவுகளும் போட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் மாணவன் பாவேந்தனை அவரது பள்ளியில் சந்தித்தோம். அப்போது மாணவன் நம்மிடம் கூறியதாவது, "கொல்லன்வயல் என்கிற சின்ன கிராமம் எங்க ஊர். அங்கே தொடக்கப்பள்ளி படிக்கும் போதே பென்சில்ல வரைவேன். நண்பர்கள் பார்த்து பாராட்டுவாங்க. அம்மாவும் ரொம்பவே உற்சாகப்படுத்தி வரைய தூண்டுவாங்க. நான் 7- வது படிக்கும் போது சேகர் சார் தான் நீ பென்சில்ல வரைவதோட பெயின்ட், பிரஸ்ல வரையனும் என்று சொன்னார். அதுவரை எனக்கு பெயின்ட் அடிக்கவோ, பிரஷ் பிடிக்கவோ தெரியாது. அப்ப ரோட்ல பெயின்ட் அடிக்கிறதைப் பார்த்து பிரஷ் பிடிச்சு பெயின்ட் அடிக்க கத்துக்கிட்டேன்.

நிறைய பத்திரிக்கைகள்ல என் ஓவியங்கள் வெளிவந்திருக்கு. இதையெல்லாம் பார்த்துட்டு எங்க கார்த்திகேயன் சார், நீ இன்னும் நிறைய வரையனும் என்று சொன்னதோட பெயின்ட், பிரஷ் வாங்கி கொடுத்து என்னை வரைய தூண்டினார். அப்பறம் கரோனா விடுமுறை, அரையாண்டு விடுமுறைகளில் பள்ளி சுவர்களில் கூட்ட அரங்கில் வண்ணம் தீட்டி இயற்கை காட்சிகள், தலைவர்கள், கருத்துப்படங்கள் வரைந்து வருகிறேன். தூண்களில் பூ தொட்டி படங்களும் வரைந்தேன்.
நான் படங்கள் வரைய தொடங்கும் போதே என்னுடன் வந்து பெயின்ட் வாங்கி கொடுக்கும் கார்த்திக் சார் சில ஆலோசனைகளும், திருத்தங்களும் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதேபோல் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஆதரவும், உற்சாகமும் கொடுக்கிறார்கள். எங்க அம்மாவும் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை இன்றைக்கு வெளியே தெரிய வைத்திருக்கிறது. ஓவியத்தில் இன்னும் நிறைய சாதிக்கனும்" என்றார்.
அந்த மாணவனுக்கு நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டோம்!