திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே அம்மன் நாயக்கனூர் பேரூராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே 100 சதவீத மாணவர் சேர்க்கை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது
கடந்த ஆண்டு 297 மாணவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயின்று வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் நாளே 297 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி என்றபோதிலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்தர் பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், சுகாதார வசதிகளையும் செய்துள்ளார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும் இங்கு நடைபெறுகின்றன. மேலும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழிக் கல்வியோடு ஆங்கில வழிக் கல்வியும் சேர்த்து பயிற்றுவிக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி இங்கு வழங்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். 100 சதவீத மாணவர் சேர்க்கையில் முதலிடம் பிடித்த இப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.