Skip to main content

'அரசு அதிகாரிகள் அரசியல் செய்தால் அதிரடியாக மாற்றப்படுவார்கள்'-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

'Government officials will be changed immediately if they do politics' - Minister I.Periyaswamy's speech

 

ஆத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள் அரசியல் செய்தால் அதிரடியாக மாற்றப்படுவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கியதோடு, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு தீர்வு வழங்கினார். குறிப்பாக ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு வேலைவாய்ப்பு, இடமாறுதல், பட்டா வழங்க கோரிக்கைவிடுத்தல், கிராமங்களில் நாடக மேடை மற்றும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்து தீர்வு பெற்றனர்.

 

 

'Government officials will be changed immediately if they do politics' - Minister I.Periyaswamy's speech

 

அப்போது ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிமுக ஆட்சியின் போது அவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் செய்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு வாரி வழங்கும் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை முறையாக பாகுபாடு இன்றி செயல்படுத்த வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு செயல்பட்டது போல் அரசு அதிகாரிகள் அரசுப் பணியில் அரசியல் செய்ய நினைத்தால் ஒருபோதும் விட மாட்டோம். ஆத்தூர் தொகுதியில் அரசியல் செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கு இடமில்லை. அவர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்படுவார்கள் என்றார். அப்போது ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சியைச் சேர்ந்த ஜெ.ஜெ.நகர் நெசவாளர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் பத்து வருடங்களாக சாலை வசதி, குடிதண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்க பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என என்றனர்.

 

உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ,பெரியசாமி நெசவாளர் காலனி பொதுமக்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு மின் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வேண்டுமென கோரிக்கை விடுத்தவுடன் உடனடியாக அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுத்ததால் மாற்றுத்திறனாளி மகிழ்ச்சியுடன் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்