திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் ஒரு அத்திப்பட்டி கிராமம் போல் உள்ள கொல்லப்பட்டி கிராம மக்கள் அதிகாரிகளின் கருணை பார்வைக்காக ஏங்குகின்றனர்.
• 6 வருடங்களாக முறையாக தண்ணீர் சப்ளை செய்வதில்லை என புகார்.
• 3 நாட்களுக்கு ஒருமுறை குளிக்கும் பள்ளி மாணவர்கள்.
• 90 குடும்பம் வசிக்கும் வீட்டில் 200 குடும்பங்கள் இருப்பதால் நாடக மேடையில் தூங்கும் முதியோர்கள்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்பாத்துரை ஊராட்சி பகுதியில் உள்ளது கொல்லப்பட்டி கிராமம். 90 குடும்பங்கள் சுமார் 300 பேர் வசிக்கின்றனர். அனைவரும் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அனைத்து குடும்பத்திலும் உள்ள மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி அதே வீட்டில் வசிப்பதால் அவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. சரியான கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சீமைக்கருவேல மரங்களின் மறைவிடத்தையும், மரத்தடி மறைவையும் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கொல்லப்பட்டி கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சின்னாளபட்டியில் உள்ள தம்பித் தோட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமத்தில் உள்ள முதியோர்கள் தங்களது வீட்டில் படுக்க இடம் இல்லாததால் இரவு நேரங்களில் நாடக மேடையில் தான் அனைவரும் தூங்குவதற்கு பயன்படுத்துகின்றனர்.
இதனால் அவர்கள் கொசுக்கடிக்கு ஆளாகி பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தங்கள் கிராமத்திற்கு (கொல்லப்பட்டி) அம்பாத்துரை ஊராட்சி நிர்வாகம் சார்பாக வடிகாலை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்புவதில்லை எனவும், இதனால் தங்கள் கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு ஆளாவதாக குறை கூறுகின்றனர்.
தங்கள் கிராமத்திற்கு குடிதண்ணீர் விநியோகம் செய்தவற்காக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிப்பது இல்லை எனவும், பம்ப் ஆப்ரேட்டர்கள் முறையாக மின் மோட்டார்களை இயக்குவதில்லை எனவும் குறை கூறுகின்றனர். இதனால் தங்கள் கிராமத்திற்கு ஆறு வருடங்களாக குடிதண்ணீர் விநியோகம் செய்வதில்லை என கொல்லப்பட்டி கிராம மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.
குடிதண்ணீருக்காக இவர்கள் டிராக்டர் மூலம் தனியார்கள் கொண்டு வரும் குடிதண்ணீரை குடம் ஒன்றுக்கு ரூ.5 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் இவர்கள் வாங்குகின்ற சம்பளம் 100ல் 30 முதல் 40 ரூபாய் வரை குடிதண்ணீருக்காக செலவிடுகின்றனர். குடிதண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளை 3 நாட்களுக்கு ஒருமுறை தான் குளிப்பாட்டி அனுப்பும் அவலநிலையில் உள்ளனர்.
தங்கள் கிராமத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகள், குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து ஊராட்சி செயலர்கள் முறையாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமோ, ஊராட்சி உதவி இயக்குநரிடமோ, திட்ட இயக்குநரிடமோ தெரிவிப்பது எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செம்பட்டியில் உள்ள ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன் அவர்களிடம் தங்களது கிராமத்தின் அவலநிலை குறித்து, நாங்கள் முறையிட்டதால் உடனடியாக டிராக்டர் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டார். ஒரு மாத காலம் தண்ணீர் விநியோகம் செய்தனர். அதன்பின்னர் தண்ணீர் வருவதில்லை. ஊராட்சி செயலர்கள் எங்கள் கிராமத்தை புறக்கணித்து வருவதால் ஆத்தூர் ஒன்றியத்தில் அத்திப்பட்டி கிராமம் போல் எங்கள் கிராமம் எந்த ஒரு நலத்திட்டத்தையும் பெறாத கிராமமாக உள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதால் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கருணையுடன் ஏற்று எங்கள் கிராமத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் குடிதண்ணீர் பற்றாக்குறைகள், கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.