சிதம்பரம் உட் கோட்டத்திற்கு உட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி பேருந்துகளுக்கு இன்று சிதம்பரத்தில் உள்ள விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து பணிமனையில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வருடாந்திர கூட்டு ஆய்வு பணி நடைபெற்றது.
இதில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ், சிதம்பரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, மாவட்ட துணை கல்வி அதிகாரியின் உதவியாளர் முத்துக்குமார் ஆகியோர் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் உட்கோட்ட பகுதிகளில் இருந்து 46 பள்ளிகளில் உள்ள 266 வாகனங்களில் ஆய்வுக்காக 176 வாகனங்கள் கலந்து கொண்டன. அதில் 20 வாகனங்கள் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. 156 வாகனங்கள் தேர்ச்சி பெற்றன. 90 வாகனங்கள் இந்த ஆய்வில் கலந்து கொள்ளவில்லை. அவை பணிமனைகளில் வேலை செய்து கொண்டிருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக துணை கண்காணிப்பாளர், மோட்டார் வாகன ஆய்வாளர், ஓட்டுநர்களுக்கு பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் பள்ளி குழந்தைகளை வாகனத்தில் நடத்தும் முறைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.