மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு கிராமத்திலும் கூரையில்லா வீடு மாற்றுவதற்கு அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அப்படிக் கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு, பிரதமர் வீடு கட்டும் திட்டம் இப்படிப்பட்ட பெயர்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்டு தோறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடுகட்ட நிதி வழங்கப்படுகிறது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்காக 72 ஆயிரம் ரூபாய் மாநில அரசின் பங்காக 98 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக 100 நாள் வேலை திட்ட மூலம் அந்தப் பணியை அவர்கள் வீடு கட்டும் பணிக்கு மேற்கொண்டால் அதற்காக 20,000 ரூபாய் தூய்மை பாரத இயக்கத்தில் கழிவறை கட்ட 12,000 இப்படி மொத்தம் இரண்டு லட்சத்தி இரண்டாயிரத்து 160 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகள் வீடு கட்டத் துவங்குவதற்கு முன்பே பல ஒன்றியங்களில் பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை பயனாளிகள் எடுத்து தங்கள் சொந்த செலவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது அதிகாரிகள் வீடு கட்டும் பணிகளை விரைந்து கட்டி முடிக்குமாறு பயனாளிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
ஆனால் பயனாளிகள் தரப்பில் வீடு கட்டுவதற்குத் தேவையான மணல் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் தரப்பில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மூலம் வீடு கட்டும் பயனாளிகளை வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு பயனாளிகளைத் துரிதப்படுத்துமாறு தலைவர்கள் மூலம் நெருக்கடி கொடுக்க முயலுகிறார்கள் அதிகாரிகள். ஊராட்சித் தலைவர்கள் இதில் தலையிட தயக்கம் காட்டுகிறார்கள்.
உதாரணமாக கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் 1,489 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட பலர் இன்னும் வீடு கட்டி முடிக்கப்படவில்லை. பயனாளிகளை விரைவில் வீடு கட்டி முடிக்குமாறு தலைவர்கள் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பலரும் ஏற்கனவே அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளே முன்நின்று அதைக் கண்காணிக்க வேண்டும். அதில் எங்களைச் சம்பந்தப் படுத்தக்கூடாது இனி வரும் காலங்களில் வீடு கட்டும் பயனாளிகளை ஊராட்சித் தலைவர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும். மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்குத் தேவையான அளவு மணல் எடுத்துக்கொள்ள தலைவர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமே இந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். நாங்களும் பயனாளிகள் பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி வலியுறுத்துவோம் என்கிறார்கள் பல்வேறு ஊராட்சிமன்றத் தலைவர்கள்.
இதே போன்ற பிரச்சினை தமிழகம் முழுவதும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளும் அதிகாரிகளும் சிக்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இதில் வீடு கட்டாமலே முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு ஒன்றியங்களில் கண்டறியப்பட்டு ஆய்வு நடவடிக்கையில் உள்ளது. எனவே வீடு கட்டும் திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவர் மூலம் தகுந்த பயனாளிகளை தேர்வு செய்து வீடுகளை ஒதுக்கீடு செய்து தலைவர்கள் மூலம் விரைந்து பணிகள் முடிக்க அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புத் தேவை என்கிறார்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்.