தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவின் ஒரு பிரிவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர். ஆனால் மற்றொரு ஜாக்டோ ஜியோ பிரிவினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
இதனடிப்படையில் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்து போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்கள் எழிப்பினர்.இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவை மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது.