விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாற்பத்தி ஒன்பது இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் அரசு வழிகாட்டு முறைப்படி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகப்படியான பணம் வசூல் செய்யக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனை அதிகாரிகள் குழுவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளை பெற்றாள் என்ற ஊரில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பருவகால பட்டியல் எழுத்தராக வேலை செய்து வந்தவர் ராமச்சந்திரன். இவர், நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அதிகப்படியாக லஞ்சமாக பணம் வசூலித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கண்காணிப்பு அதிகாரிகள் குழு கடந்த சனிக்கிழமை அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது, ராமச்சந்திரன் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவது உறுதியானது. இதையடுத்து பணியில் இருந்த இராமச்சந்திரனை அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும், லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.