திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் திட்டத் துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின் உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''தமிழக அரசின் ஒவ்வொரு நலத்திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1996 முதல் 2006 ஆம் ஆண்டுகளில் சமுதாய வளைகாப்பு திமுக அரசால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பெண்களும் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தில் பயன்பெறும் வகையில் தமிழக அரசு திட்டங்களை உருவாக்கி வருகிறது. பெண்களின் வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசின் திருமண நிதி உதவித் திட்டம், உயர்த்தப்பட்ட மகப்பேறு உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களைப் பெண்களுக்காகச் செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் வாழும் அனைத்து மக்களும் சரி சமமாக இருக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்களைப்போலவே சொத்துரிமை பெண்களுக்கும் சரி சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கலைஞர் சட்டம் இயற்றியது மூலம் தற்போது செயல்பட்டு வருகிறது.
மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தைக் கலைஞர் முதன்முதலில் துவக்கி வைத்தார். உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் அதிக அளவில் போட்டியிடும் வகையில் 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான். பல்வேறு அரசு துறைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் 3 ரூபாய் குறைப்பு, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி மற்றும் பரப்பலாறு அணை தூர்வாரும் பணி, ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது'' என்று கூறினார்.
இந்த விழாவில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட அதிகாரிகளும், கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.