கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளை 35 நாட்களுக்குப் பிறகு இன்று (14.06.2021) கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது, ''டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும். அப்படி கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வு திரும்ப வாபஸ் பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும். முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். பொது போக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. தொற்று பரவலைத் தடுக்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது. மக்கள் சக்தியே உயர்ந்தது'' என்றார்.