சுங்கச் சாவடி பண வசூலிப்பால் நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர் விமர்சனம் இருந்துவருகிறது. சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு எதிராக தொடர்ந்து போராடியும் பேசியும் வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகள் வரி வசூலில் இறங்கின. கார், வேன், லாரி, பேருந்து போன்றவைகள் அடிக்கடி குறிப்பிட்ட சாலை வழியாகச் சென்றுவரும்போது 'பாஸ்' எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம். அரசுப் பேருந்துகளுக்கு அரசே பாஸ் எடுத்துத் தரும். அப்படி, ஒரு அரசுப் பேருந்து சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ள சமயபுரம் டோல் கேட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பாஸை எடுத்து நீட்டியுள்ளார். அதை பரிசோதித்த சுங்கச் சாவடி ஊழியர்கள், பாஸ் காலவதியாகிவிட்டதை பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்னர்.
மேலும், பணம் கட்டிவிட்டு பேருந்தை எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஓட்டுநர், சுங்கச் சாவடி ஊழியர்களோடு பேச, அது வாக்கு வாதமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியுற்ற பேருந்து பயணிகள், சுங்கச் சாவடி ஊழியர்களிடம் "எப்பா எவ்வளவுன்னு சொல்லுங்க நாங்களே போட்டு கட்றோம், இந்த ஒரு முறை மட்டும் அனுமதிங்க. நாங்க அவசரமா போகணும்னு' கேட்டுக்கொண்டனர்.
அதன் பிறகு, சுங்கக் கட்டணமாக 150 ரூபாயை பயணிகள் செலுத்திய பிறகு, டோல்கேட் ஊழியர்கள் பேருந்தை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளனர்.
-மகேஷ்