சென்னையில் கல்லூரி மாணவர்கள் மாநகரப் பேருந்துகளில் செல்லும்போது அவ்வப்போது ரகளையில் ஈடுபடுகின்றனர். ஐ.சி.எப். பகுதியில் இருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு சென்ற பஸ்சில் மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
இது தொடர்பாக மாணவர்கள் சிலர் மீது அயனாவரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்வது உள்ளிட்ட 2 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஒரு மாணவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் புதுப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வருவதாகவும், ஆனால் பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருவதாக போலீசார் தவறாக வழக்கு போட்டுள்ளனர் என்றும் முறையிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரான மாணவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். இருப்பினும் அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த மாணவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த மாணவர், தான் படிக்கும் சட்டக் கல்லூரி வளாகத்தில் 10 மரக்கன்றுகளை நட்டு அதற்கு ஒரு மாதம் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். தண்ணீர் ஊற்றி பராமரிப்பது குறித்து தினந்தோறும் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.