![Government bus driver and conductor attacked and snatched wallet](http://image.nakkheeran.in/cdn/farfuture/rG50QcKQ1NW7ixNsJv7VjXRfxNEZSLr_jcGk0ZD4IEA/1671990724/sites/default/files/inline-images/n222702.jpg)
அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கி பணப்பை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் விழுப்புரம் கோட்ட அரசு பணிமனைக்கு உட்பட்ட பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் கிராமம் அருகே வரும்போது பேருந்துக்கு பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் இருசக்கர வாகனத்திற்கு வழி விடவில்லை என குடிபோதையில் பேருந்துக்கு முன்னால் சென்று வழிமறித்துள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை இறங்கி வரக்கூறி அவதூறாகப் பேசி அடித்துள்ளனர். அதில் நடத்துநர் வைத்திருந்த பணப்பையைப் பறித்து வீசியுள்ளனர். அப்போது பேருந்து உள்ளே இருந்த காக்கி சட்டை அணியாத காவலர்கள் தடுத்தும் அவர்கள் கேட்காமல் நடத்துநர் மற்றும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் நடத்துநர் பாலமுருகன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விவரம் அறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.