சேலத்தில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 31 பவுன் நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சேலம், கன்னங்குறிச்சி தியாகராயன் நகர் மோட்டாங்குறிச்சியைச் சேர்ந்தவர் குமார் (67). இவர், ஜெனரேட்டரை பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு வாரி சீனிவாசன் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணமாகி விட்டது. பொறியாளரான வாரி சீனிவாசன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 21ம் தேதி குமார், தனது மனைவி சிவகாமி, 2வது மகள் மற்றும் பேத்தியுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், சென்னையில் வேலை செய்து வரும் பொறியாளர் வாரி சீனிவாசன், தொடர் விடுமுறை காரணமாக டிச. 24ம் தேதி அதிகாலை சொந்த ஊர் திரும்பினார். நள்ளிரவு ஒரு மணியளவில், வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். வீட்டுக்குள் உள்ள 2 பீரோக்களை உடைத்து, அவற்றில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தனது பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதற்கிடையே, தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். வீட்டு பீரோவில் இருந்த 31 பவுன் நகைகள், 7 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. விரல்ரேகை நிபுணர்கள் நிகழ்விடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர்.
வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். சம்பவம் நடந்த பகுதி, அக்கம்பக்கத்து தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.