புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் தச்சன்குறிச்சி சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் சுரேஷ், காவல் உதவி ஆய்வாளர் சமுத்திரராஜன் மற்றும் தலைமை காவலர் அன்பழகன் குழுவினர் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்ட வாகனத்தை சோதித்த போது அதில், ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால், அந்த நகைகளை கொண்டு செல்ல எந்தவிதமான ஆவணங்களும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.
பறக்கும் படையினர், விசாரணை செய்ததில், வாகனப் பொறுப்பாளர், சேலம் மாவட்டம், சின்னவீராணத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் மோகன் (25), என்றும் ஓட்டுனர் மேட்டூர் மேச்சேரி தேவராஜ் மகன் சந்தோஷ்குமார் (26) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த நகைகள் சேலம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், இந்த நகைகளை புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பெரிய நகைகடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் தங்க நகைகளை கந்தர்வகோட்டை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.