கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள திருச்செங்கோடு விஏஓ, மூன்றாவது முயற்சியில் முக்கிய குற்றவாளியை சரியாக அடையாளம் காட்டியதால் சிபிசிஐடி போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டபோதும், குற்றவாளிகளிடம் மோட்டார்சைக்கிள், செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றியபோதும் தயாரிக்கப்பட்ட கைப்பற்றுதல் மகஜரில், அப்போது திருச்செங்கோடு டவுன் விஏஓவாக இருந்த மணிவண்ணன், அரசுத்தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில், அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 10.1.2019ம் தேதி சாட்சியம் அளிக்க அரசுத்தரப்பு சாட்சியான விஏஓ மணிவண்ணன் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது குற்றவாளி கூண்டில் இருந்த சதீஸ்குமாரை அவர் சரியாக அடையாளம் காட்டவில்லை. பின்னர், மறுநாளைக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. ஜனவரி 11ம் தேதி நடந்த விசாரணையின்போதும் அவர் சதீஸ் என்கிற சதீஸ்குமாரை அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தவறுதலாக பிரபு என்பவரை அடையாளம் காட்டினார்.
கோகுல்ராஜூம், அவருடைய தோழி சுவாதியும் சம்பவத்தன்று, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போதுதான் யுவராஜ் மற்றும் கூட்டாளிகள் கோகுல்ராஜை மிரட்டி கடத்திச்சென்றனர். அந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
அந்தக் காட்சிகளைப் பார்த்து அடையாளம் சொல்லும்படி விஏஓ மணிவண்ணனிடம் கேட்டபோது, மூக்குக் கண்ணாடியை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்ததால், அடுத்த முறை சரியாக அடையாளம் காட்டுகிறேன் என்று கூறினார். இதையடுத்து விசாரணை ஜனவரி 18, 2019ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி வெள்ளிக்கிழமையன்று (ஜன. 18) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விஏஓ மணிவண்ணனுக்கு சிசிடிவி கேமரா காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டன. அந்தக் காட்சியில் இடம்பெற்றிருந்த யுவராஜின் கூட்டாளிகள் சந்திரசேகர், அவருடைய மனைவி ஜோதிமணி, சதீஸ்குமார், யுவராஜ், அருண், செல்வராஜ், ரஞ்சித், ரகு என்கிற ஸ்ரீதர், குமார் என்கிற சிவக்குமார் ஆகியோரை அடையாளம் காட்டினார்.
இதையடுத்து குற்றவாளி கூண்டில் இருக்கும் எதிரிகளில் சதீஸ் என்ற சதீஸ்குமாரை சரியாக அடையாளம் காட்டும்படி அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன், சாட்சியிடம் கூறினார். விஏஓ மணிவண்ணன் சாட்சி கூண்டில் இருந்தவாறே, செல்வராஜ் அருகில் இருப்பவர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார் என்று அடையாளம் காட்டினார்.
அவர் அடையாளம் காட்டிய நபர் யார் என்று கையை உயர்த்தும்படி நீதிபதி இளவழகன் கூறினார். அதற்கு சட்டென்று சங்கர் கையை உயர்த்தி, தனது பெயரைக் கூறினார். இதனால் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்தாலும், மீண்டும் சாட்சியைப் பார்த்து குற்றவாளி கூண்டுக்கு அருகில் சென்று நன்றாக பார்த்து அடையாளம் காட்டுங்கள் என்றார்.
அதன்படி அவரும் குற்றவாளி கூண்டுக்கு அருகில் சென்று, இவர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார் என்று மிகச்சரியாக அடையாளம் காட்டினார். அதன்பிறகே அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களும், சிபிசிஐடி போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அத்துடன் நீதிமன்ற விசாரணை முடித்துக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணையை வரும் 25.1.2019ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். அன்றைய தினம், விஏஓ மணிவண்ணனிடம் யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், இப்போதே இந்த வழக்கில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.