‘சொந்தத் தொகுதியான சிவகாசி தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை?’ என எதிரணியினர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், ராஜபாளையத்தில் பிரச்சாரத்தை தொடங்கியபோதே, அதற்கான விளக்கத்தை அளித்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
“நல்ல நேரம் பார்த்து மாலை 5 மணிக்கு எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறேன். நான் இருக்கிற ஊர் மட்டுமல்ல.. நான் கடந்து செல்லும் ஊரெல்லாம் நன்றாக இருக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் நான்.
ராஜபாளையம் பகுதியில் எனக்கு வீடு, விவசாய நிலங்கள் இருக்கிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். இந்தப் பகுதி மக்களின் அன்பையும் பாசத்தையும், இந்தத் தொகுதியில் உள்ள சமுதாய மக்களின் பாசத்தையும் நன்றி உணர்வுகளையும் நினைத்துப் பார்த்தே, இந்தத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தெய்வ அம்சம் கொண்ட தொகுதி. மாரியாத்தா குடிகொண்டுள்ள கோவில் முன்பு நின்று பேசுகிறேன். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கடைப்பிடிப்பேன். எனக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஒவ்வொன்றும் தெய்வத்துக்கு அளிக்கின்ற வாக்காகும். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.” என்று பிரச்சாரம் செய்தார்.
‘மக்களின் வாக்குகள் எப்படி தெய்வத்தைப் போய்ச் சேரும்?’ என்ற சந்தேகத்தை ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஒருவரிடம் முன்வைத்தபோது, ‘இன்னுமா புரியவில்லை?’ என்று ‘திருவிளையாடல் சிவாஜி’ ரேஞ்சுக்கு சிரித்துவிட்டு பதிலளித்தவர் “நல்லது செய்து மனிதனும் தெய்வமாகலாம் என்று சொல்வதுண்டு. அந்த வகையில்தான் இப்படி பேசியிருக்கிறார். ‘நான் கடவுள்’ தத்துவமே இருக்கிறது. ராஜேந்திரபாலாஜி தெய்வம் என்றால், வாக்களிக்கும் மக்களும் தெய்வங்களே! ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுவதே தெய்வச் செயல்தான்.” என வார்த்தைக்கு வார்த்தை ‘தெய்வம்’ என்று பேசி, தனக்குத்தானே பரவசப்பட்டார்.