கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருச்சி சேலம் சாலை சந்திப்பு அருகில் வாரச் சந்தை புதன்கிழமை தோறும் நடைபெறும். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கரோனா பரவல் தடை காரணமாக வாரச்சந்தை நடைபெறவில்லை. தற்போது, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்ததிலிருந்து கடந்த இரண்டு வாரங்களாக, சந்தை நடைபெற்று வருகிறது.
இந்தச் சந்தையில் எலவாசனூர் கோட்டை, இறையூர், களமருதூர், குன்னத்தூர், ஆசனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதேபோல், இப்பகுதி கிராமங்களில் விளையும் காய்கறிகளையும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். காலை 5 மணி முதல் பகல் 10 மணி வரை ஆடு மாடு விற்பனை நடைபெறும்.
நேற்று நடைபெற்ற சந்தையில் தீபாவளியை முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு 2 கோடி ரூபாய்க்கும் குறைவான அளவில் ஆடுகள் விற்பனையானதாம். இந்த ஆண்டு, 4 கோடி ரூபாய் விற்பனையாகியுள்ளது. இதற்காக கடலூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், செங்கல்பட்டு, சென்னை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து ஆடுகளை வாங்கிச் சென்றுள்ளனர்.
இதனால், ஆடுகளை விற்பனை செய்த அப்பகுதி கிராம விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள், ஆடு மாடுகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகன ஓட்டிகள், இப்படிப் பலரும் இந்தச் சந்தை வியாபாரத்தில் வருமானம் பெற்றுள்ளனர். இதுபோன்ற சந்தைப் பொருளாதாரம் பலவிதமான மக்களுக்கு வாழ்வளித்து வருகின்றது.
இதுபோன்று கிராமப்புற வியாபாரங்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆங்காங்கே கிராமப்புற பகுதிகளில் புதிது புதிதாகச் சந்தைகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம், விவசாயிகளும் வியாபாரிகளும் நுகர்வோர்களும் பெரிதும் பயனடைவார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.