சொத்துக்களை அபகரித்துக்கொண்ட கணவரிடமிருந்து குழந்தைகளை மீட்டு தரக்கோரி கண்ணீருடன் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையை சேர்ந்த சோனல் என்பவருக்கும் கோவையை சேர்ந்த வடமாநில தொழிலதிபர் சேத்தன் ரங்கா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 13 வயதில் பியூஷ் என்ற மகனும், 7 வயதில் ரச்னா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் வரதட்சணை கேட்டு சேத்தன், சோனலை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் விவாகரத்து கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று குழந்தைகளை பார்க்க வந்த சோனலை அனுமதிக்காமல் சேத்தன் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சோனலை சாய்பாபா காலனி போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சோனல், தன்னிடம் இருந்து வரதட்சணையாக 2.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை கூடுதலாக பணம் கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார். மேலும் தனது குழந்தைகளை கூட பார்க்கவிடாமல் கணவரின் குடும்பத்தினர் துரத்தி விடுவதாக குற்றம்சாட்டிய அவர் தனது குழந்தைகளையும் உடமைகளையும் தனக்கு பெற்றுதர காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். பெண் ஒருவர் கண்ணீருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.