
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு கடந்த மாதம் இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது. அதில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி அறிவிப்பு வெளியான நாள் முதலேயே தமிழகத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் நடைபெற்றுவரும் வாகன சோதனைகளில், முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தையும், பொருட்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் வீதம் மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்தந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டாக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோவை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி சந்திர பிரியாவுக்கு இரகசிய தகவல் வந்துள்ளது. உடனடியாக பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் படங்கள் பொறித்த 68 பைகளில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் ஆகியவை வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 68 பைகளில் இருந்த அனைத்து பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்து, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.