ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போது தர்மபுரியில் அதிமுகவினர் பேருந்தை எரித்ததில் வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநரின் இந்த உத்தரவு குறித்து இறந்துபோன மாணவிகளில் ஒருவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பூவனூர் கிராமத்தை சேர்ந்த காயத்ரியின் தந்தை வெங்கடேசனிடம் கேட்டதற்கு,
" எங்கள் பிள்ளைகளை எரித்து கொன்றவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை என்றைக்கு உச்சநீதிமன்றத்தில் அரசியல் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி ஆயுள் தண்டனையாக மாற்றினார்களோ அப்போதே நீதி செத்துவிட்டது. இப்போது அவர்களை விடுதலை செய்திருப்பதன் மூலம் நீதி தேவதை தலை குனிந்து நிற்கிறாள்.
எங்கள் மகளை பறிகொடுத்து தவிக்கிறோம் நாங்கள். எங்களுக்கு வயதாகிவிட்டது. எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பில்லை. இவற்றிற்கெல்லாம் இறைவன் அல்லது இயற்கை தகுந்த தண்டனை கொடுக்கும் என்று அவைகளிடம் விட்டு விடுகிறோம்" என்றார்.