தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக 'ஆபரேஷன் கஞ்சா' என்ற திட்டத்தில் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்ட 2,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வேலவன் புதுக்குளத்தில் தனியார் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த 2,000 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் மதுரை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தல் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏடிஜிபி சங்கர் தெரிவித்துள்ளார். வேலூரில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சட்ட ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தமிழக-ஆந்திரா எல்லையில் காட்பாடி அருகே உள்ள கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடியில் ஆய்வு செய்த அவர், பின்னர் சித்தூர் பேருந்து நிலையத்திலும் இரவு நேர வாகன தணிக்கையை ஆய்வு செய்தார். அதேபோல் வேலூர் கிரீன் சர்க்கல், மண்டி தெருவில் இரவு நேர காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா எனவும் ஆய்வு செய்தார். அப்பொழுது சில காவலர்கள் இ பீட் எனும் செயலியை முழுமையாக பயன்படுத்த முடியாமல் திணறியதை பார்த்த ஏடிஜிபி சங்கர் அவர்களுக்கு முறையாக பயிற்சி பெற எஸ்பிக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வருவதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த கஞ்சா வேட்டைகளின் போது திரட்டிய தகவலின் அடிப்படையில் சப்ளையர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் இது தொடர்பாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை அனைத்து காவலர்களும் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஏடிஜிபி சங்கர், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் விரைவில் போலீஸ் ஃபீட்பேக் சிஸ்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.