தேனி மாவட்டத்தில் கருவாட்டுக்குள் வைத்து கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வட நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள திம்மரசன்நாயக்கனூர் வாட்டர் டேங்க் அருகே கடந்த மாதம் 16 ஆம் தேதி வழக்கம்போல போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது லாரி ஒன்று கருவாடு ஏற்றிக்கொண்டு வந்திருந்தது. எதேச்சையாக லாரியை நிறுத்தி கருவாட்டு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் கருவாட்டு மூட்டைகளுக்கு இடையில் சுமார் 1200 கிலோ கஞ்சா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக அபுபக்கர் சித்திக், எழுவனூர் செல்வராஜ், சின்னசாமி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ணாகாந்த் வல்லாப் என்பவர் இருப்பது போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக ஆண்டிபட்டி டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஒடிசா மாநிலம் மங்களகிரி மாவட்டத்திற்கு சென்று மெயின் குற்றவாளியான கிருஷ்ணகாந்த் வல்லாப் என்ற அந்த நபரை ஒடிசா மாநில போலீசார் உதவியுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணகாந்த் காய்கறிகள், தேங்காய், கருவாடு, மிளகாய் வத்தல் கொண்டு செல்லும் லாரிகளில் கஞ்சா மூட்டைகளை கடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணகாந்த் வல்லாப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.