பெரம்பலூர் மாவட்ட மாலை முரசு டிவி செய்தியாளராக பணியில் உள்ளவர் சரவணன். சில தினங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த சூதாட்ட கும்பல் தலைவன் சோமசுந்தரம் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மங்களமேடு போலீஸ் எல்லையில் உள்ள எறையூரில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது மங்களமேடுபோலீசார் அந்த கும்பலைகையும் களவுமாக பிடித்து வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று சோமசுந்தரம் தலைமையிலான அந்தகும்பல் பெரம்பலூர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்திருந்தனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட சரவணன் அவரது கேமராமேன் அரவிந்த் ஆகிய இருவரும் சூதாட்ட கும்பலை நீதிமன்றத்தின் வெளியே படம் எடுத்துள்ளனர். இதைக்கண்டு கோபமடைந்த அந்த கும்பல் சரவணன் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கி கேமராவை உடைத்து நொறுக்கினர். இதில் படுகாயமடைந்த சரவணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
நீதிமன்ற வளாகத்தில் நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவரமறிந்த பெரம்பலூர் போலீசார் தாக்குதல் நடத்திய சூதாட்ட கும்பலை தேடி வருகிறார்கள். சோமசுந்தம் தலைமையிலான கும்பல் லட்சக்கணக்கணக்கில் பணம், கார் உட்பட விலை உயர்ந்த வாகனங்களை வைத்து திருச்சி பெரம்பலுர் உட்பட பல இடங்களில் சூதாட்டம் நடத்தி பலர் லட்சக்கணக்கில் பணத்தையும் ஆடம்பர வாகனங்களையும் இழந்துள்ளனர்.
இந்த கும்பலின் அட்டகாசத்தை போலீஸ் முடிவுக்கு கொண்டு வருமா? என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.