செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு அருகே உள்ளது ஆதித்யாநகர். இந்தப் பகுதியில் உள்ள 3வது தெருவில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் ஆரம்ப காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சிக்காகவும், விளையாடுவதற்காகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும் விளையாட்டு வீரர்கள் இந்த பூங்காவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் இந்தப் பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் நடைபாதைகளும், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களும் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் இந்தப் பூங்காவை திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றியுள்ளனர்.
24 மணி நேரமும் போதையில் வரும் மதுப்பிரியர்கள், அங்கேயே அரைகுறை ஆடைகளுடன் படுத்து வருகின்றனர். மேலும், இந்தப் பூங்காவிற்கு நேரம் கழிக்க வருபவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் குடிக்கும் மது பாட்டில்களை அப்படியே உடைத்துவிட்டுச் செல்வதால் அங்கு வரும் பொதுமக்கள் கால்களில் குத்திக் காயப்படுத்துகின்றன.
இதை யாரேனும் தட்டிக்கேட்டால் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுவதாக அப்பகுதி மக்கள் அச்சமுடன் தெரிவிக்கின்றனர். ஆகையால், மர்ம நபர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பூங்காவை மீட்டு அதனை மீண்டும் சீரமைத்து பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.