கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் காந்திநகர் பகுதியில் செல்லமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல் கோயில் பூசாரி தனவேல் கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், பூஜை செய்வதற்காக இன்று காலை கோயிலுக்கு வந்தபோது கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், தகவல் அறிந்து விரைந்து வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அம்மன் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கத் தாலி மற்றும் உண்டியலில் இருந்த 15,000 ரொக்க பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் கோயிலில் புகுந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக்கொண்டு, உண்டியலை அருகில் உள்ள வெள்ளாற்றில் வீசிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.