விநாயகர் சதுர்த்தி விழா 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்பைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சில பகுதிகளில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு கரூர் மாவடியான் கோவில் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை நள்ளிரவில் சேதம் ஏற்பட்டதன் காரணமாக போலீசருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை விமர்சையாக நடத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டில் இந்து அமைப்புகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை பிரமாண்டமான முறையில் நடத்த உள்ளதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடி போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட 300 போலீசார் கலவரங்களை தடுக்க பயன்படுத்தும் உடைகளை அணிந்து சென்று, கொடி அணிவகுப்பை நடத்தினர். நகரின் முக்கிய வீதிகளான 80 அடி சாலையில் தொடங்கி, மனோகரா கார்னர், ஜவஹர் பஜார், தலைமை காவல் நிலையம் வழியாக, ஐந்து ரோடு வரை கொடி அணிவகுப்பு நடத்தினர். இதன் மூலம் எந்தவித அசம்பாவிதங்களையும் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காவல்துறை தயாராக உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது.