கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் சாலைகளில் வைக்க தயாராகிக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது அடிமை இந்தியாவை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களை திரட்ட இந்து பண்டிகைகளை பயன்படுத்திக்கொண்டார் பாலகங்காதர திலகர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கோவிலில் கொண்டாடலாம் என மக்களை ஓரிடத்தில் திரட்டி, பக்தி விழாவில் அரசியல்பேசி ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை கிளர்ச்சி பெறசெய்ய முயன்றார். இதன் தொடர்ச்சியாக தற்போது விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுக்க இன்றும் விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதேசமயம் இந்தவிழாவில் அரசியல் கலந்துள்ளது என்பது நிதர்சனம்.
வீடுகளில் சிம்பிளாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இப்போது ஏரியாவுக்கு, ஏரியா, தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைகளை வைத்து கொண்டாடுகிறார்கள். அப்படி வைக்கப்படும் சிலைகளுக்காக வசூல் வேட்டைகளும் நடத்தப்படுகிறது. இந்த வசூல் ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரையும் செல்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாரத்துக்கு முன்பே, தெருவில் விநாயகர் சிலை வைக்கப்போகிறோம் என சிலர் நோட்டு பேனாவோடு கிளம்பி வர்த்தக, வியாபார நிலையங்களுக்கு வந்து பணம் கேட்கிறார்கள். மாநகரம், நகரம், பேரூராட்சி கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த வசூல் பழக்கம் தொடர்கிறது. இந்த வசூல் நடவடிக்கையில் வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஈடுபடுகிறார்கள். பொதுவாக பெரியவர்களுக்கு உதவியாக சிறார்கள் வசூல் நடவடிக்கையில் ஈடுபடுவர். ஆனால், தற்போது சிறார்களே தனியாக வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை டூ சேத்பட் சாலையில் நாம் பயணிக்கையில் 7 இடங்களில் சிறார்கள் உண்டியல் வைத்துக்கொண்டு வாகனங்களில் செல்பவர்களை மடக்கி, ‘விநாயகர் சிலை வைக்கப்போகிறோம் பணம் போடுங்கள்’ எனக் கேட்பதை பார்க்க முடிந்தது. உண்டியல் உலுக்கி பணம் கேட்கும் சிறார்கள் வயது 15 வயதுக்குள்ளேயே இருக்கிறது. சாலையின் குறுக்கே இரண்டு கைகளை நீட்டி வண்டிகளை மடக்கி உண்டியலில் காசு போடு என அதட்டலாக கேட்பதையும், பணம் போடாமல் போகும் மக்களை வயதுக்கு மீறிய கொச்சையான வார்த்தைகளில் வசை பாடுவதையும் காணவும், கேட்கவும் முடிந்தது.