சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வீடுகள், தெருக்களில் பிரதிஷ்டை செய்து பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் பொது இடங்களில் 3 அடி முதல் 13 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் அமைக்க மட்டும் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதற்கு அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். பக்தர்களை கவரும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து விநாயகர் சிலைகள் தயாராகி சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வில்லிவாக்கத்தில் பாகுபலி வடிவில் விநாயகர் சிலை அமைக்கப்படுகிறது. அதேபோல் ஆழ்வார்திருநகர் பகுதியில் படகில் மீனவர் வடிவில் விநாயகர் சிலை அமைக்கப்படுகிறது.
இதேபோன்று சென்னை முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் மற்றும் தனியார் சிலர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்தாண்டு சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 5,600 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசாருக்கு 3,500 சிலைகள் அமைப்பதற்கான மனுக்கள் மட்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து வந்துள்ளது. அதன்படி போலீசார் மனுவை ஆய்வு செய்து 3 ஆயிரம் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். வரும் 31ம் தேதி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என இந்து அமைப்புகள் ஊர்வலத்திற்கும், அதேபோல் 1 மற்றும் 3ம் தேதிகளில் மற்ற அமைப்புகளுக்கு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.