
சானிடைசரை அலட்சியமாகப் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, ஈ.வி. கருவாட்டுபேட்டை பகுதியில் உள்ள காமராஜர் நகரில் பாலமுருகன் - சுமதி தம்பதியினர் வசித்துவந்தனர். இவர்களின் மூன்றாவது மகன் 13 வயது ஸ்ரீராம் .
வீட்டின் அருகே உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து ஸ்ரீராம் கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடியுள்ளார். அப்படி விளையாடிக்கொண்டிருக்கையில் அதிகமாக நெருப்பு வர வேண்டும் என்பதற்காக நெருப்பின் மீது சானிடைசரை ஸ்ரீராம் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பரவிய தீ ஸ்ரீராமின் உடல் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதில் 68% தீக்காயம் ஏற்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஸ்ரீராம், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சானிடைசரைத் தவறாகப் பயன்படுத்தியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.