அமெரிக்காவில் உள்ள வாகை மகளிர் தமிழ் சங்கம் நடத்திய மொய் விருந்து நிகழ்ச்சியில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாகி உள்ளது.
கஜா புயலின் கோரத்தாண்டவம் டெல்டா மாவட்டங்களை முழுமையாக சீர்குலைத்து விட்டது. பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு எடப்பாடி அரசாங்கத்தின் உதவிகள் எட்டிப்பார்க்கவில்லை. புயல் ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் டெல்டா மக்களின் துயரம் இன்னும் வடிந்தபாடில்லை.
தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் மட்டுமே ஓரளவுக்கு களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினர்.
குறிப்பாக, வாகை மகளிர் தமிழ்ச் சங்கத்தின் பெண்மணிகள் இதற்கான முன்முயற்சியை எடுத்தனர். இதற்காக நடந்த மொய் விருந்தில் 5 லட்சம் டாலர்கள் முதல் கட்டமாக வசூலாகியிருக்கிறது.
"இந்த நிதியை, முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான எல்.என்.புரம், மாங்காடு, வடகாடு, கொத்தமங்கலம், செரியலூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகளை அமைப்பதற்காக செலவிட உள்ளனர் " என்கிறார் தமிழ்நாட்டில் இருந்தபடியே, வாகை குழுவினரோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியரும், கல்வியாளர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளருமான சதிஷ்குமார்.
மேலும், "அமெரிக்காவில் நடைபெறும் மொய்விருந்து சேவை நோக்கம் கொண்டது. கலந்து கொண்டவர்களும் இம்மொய் விருந்து நிகழ்வில் பங்கேற்று தம்மால் இயன்ற , விரும்பிய அளவில் நன்கொடையாக நிதி அளிக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பலன் கிடைக்கும் என எவரும் எதிர்பார்த்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு நன்கொடை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்தாலும் தமது சொந்த மண்ணை நேசிக்கும் அமெரிக்க தமிழினச் சொந்தங்கள் நன்றிக்கு மட்டுமல்ல, போற்றுதலுக்கும் உரியவர்கள் " என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெனிபர், அனிதா, அருள்ஜோதி, திவ்யா, பிரேமலதா, நாகராணி, சத்யா,கலைச்செல்வி, கிருஷ்ணவேணி, தேவகி மற்றும் வாகை குழுவினர் செய்திருந்தனர்.