கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரவு, பகல் பாராமல் மின்வாரிய தொழிலாளர்கள் தீவிரமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை அமைச்சர்கள் அவ்வப்போது பார்வையிடுகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம் விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன், ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையின்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஆங்காங்கே மக்கள் மறியல் செய்கிறார்கள். இது அரசுக்குத்தானே கெட்டப்பெயரை உண்டாக்கும். உடனே மின்இணைப்பு கொடுப்பதற்கான பணியை இன்னும் தீவிரப்படுத்துங்கள் என்றார். அதற்கு அதிகாரிகள், வெளிமாவட்டங்களில் இருந்து மின்வாரிய தொழிலாளர்களை அழைத்து வந்து தொடர்ந்து வேலை நடக்கிறது. அவர்களுக்கு ஓய்வே கொடுப்பதில்லை என்றனர்.
தொடர்ந்து பேசிய சீனிவாசன், நவீன டெக்னாலஜி மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள் என்றார்.
அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அது சாத்தியமில்லை என்றார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான், கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என கேட்டார்.
இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அமைச்சரின் பேச்சை கேட்ட அதிகாரிகள், அதிர்ச்சியடைந்ததுடன், இவர்கள் கண்காணிப்பு, பார்வையிடுவது என்ற பெயரில் நம்மை தொந்தரவுதான் செய்கிறார்கள். இவர்கள் தலையீடு இல்லாமல் இருந்தாலேபோதும், மின்வாரிய பணிகள் தீவிரமாக நடக்கும் என்று முனுமுனுத்துக்கொண்டனர்.