கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் பெண்கள் கழிப்பறைகளைக்கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். நிவாரணப் பணிகளில் அரசு எந்திரம் மிகவும் மெத்தனமாகச் செயல்படுவதாக ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி குற்றம் சாட்டுகின்றார்.
புதுக்கோட்டை நகரம் வண்டிப்பேட்டை, புதுக்கோட்டை ஒன்றியம் பொன்னம்பட்டி, அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி, சாமந்தம்பட்டி, நெய்வாசல்பட்டி, திருவரங்குளம் ஒன்றியம் தோப்புக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வியாழக்கிழமையன்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி மாட்டச் செயலாளர் டி.சலோமி, தலைவர் பி.சுசீலா உள்ளிட்டோருடன் ஆறுதல் கூறினார். அப்போது, மாதர் சங்கத்தின் சார்பில் சேகரித்து கொண்டுவரப்பட்ட அரிசி, மளிகைப் பொருட்கள், மெழுகுதிரி, போர்வை, சேலை, நைட்டி, நாப்கின் உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.
நிவாரணப்பணிகள் குறித்து சுகந்தி கூறும்போது, ‘’ புயல் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் எச்சரித்தும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. மீட்புப்பணிகளை தயார்நிலையில் வைத்திருந்தால் புயல் அடித்து ஒருசில தினங்களுக்குள்ளாகவே மக்களை ஓரளவுக்காவது இயல்புநிலைக்கு திருப்பியிருக்க முடியும். ஆனால், புயல் தாக்கி ஒருசில தினங்களுக்குப் பிறகுதான் மீட்பு நடவடிக்கைக்கையே தொடரப்பட்டுள்ளது. இந்த அரசின் கையாலாகாத நிலையையே இது காட்டுகிறது.
இந்நிலையில், மக்களுக்கான நிவாரணப்பணிகளே இன்னமும் தொடங்கப்படவில்லை. ஒருசில தன்னார்வ அமைப்புகளைத்தவிர அரசின் சார்பில் இன்னமும் ஒருத்தரும் வரவில்லை என்ற குற்றச்சாட்டுத்தான் நாங்கள் சென்றுவந்த திசையெல்லாம் ஒலிக்கிறது. அரசு இனிமேலாவது நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 சதவிகிதம்கூட இன்னமும் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. சேதமடைந்த வீடுகள், மரங்கள், சாகுபடிகள் குறித்த கணக்கெடுப்புகளும் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களிடமிருந்து வருகிறது.
மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும், தங்குவதற்கான இடத்துக்குமே அல்லாடிவரும் நிலையில் சுயஉதவிக் குழுக்ககளில் வாங்கிய கடனுக்கான தவனையை கட்டச்சொல்லி நிர்பந்திக்கப்படுவதாக சில இடங்களில் இருந்து புகார் வருகிறது. இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலாகும். குறைந்தது 6 மாதத்துக்கு இடையில் எந்தவிதமான கடனையும் கட்டச்சொல்லி நிர்பந்திக்கக்கூடாது என சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
புயலில் அனைத்துத்தரப்பினரும் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பெண்களுக்கான நாப்கின் கிடைப்பதில் மிகுந்த தட்டுப்பாடு உள்ளது. குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத நிலையில் குளிப்பதற்கும், கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதில் நகர்ப்புறத்துப் பெண்கள் படும் சிரமத்துக்கு அளவே இல்லை. கொதிநிலையில் மக்கள் போராட்டக்களத்துக்கு வரும் முன்பாகவே அரசு சீரமைப்புப்பணிகளையும் நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிட வேண்டுமென்றார்.