அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று (21.12.2020) ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைவருக்கும் 200 நாட்கள் வேலை கொடுக்க வேண்டியும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க வலியுறுத்தியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் லலிதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய குழு உறுப்பினர் அமிர்தம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மத்திய அரசு கொண்டுவந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, ஒரு கேஸ் சிலிண்டரை பாடையில் வைத்து, அதற்கு மாலையிட்டுத் தாரை தப்பட்டையுடன் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் பிரசன்னா, துணைச் செயலாளர் கோமதி உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.