திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையைத் துவங்கியுள்ளார்.
தற்பொழுது இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் 326-ல் பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவர்களின் வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று நிமிஷம் நசுக்கி இருக்கிறார். அவனால் மூச்சு விட முடியவில்லை. கீழே விழுந்துள்ளான். கீழே விழுந்து அவன் மூச்சு விட்ட பிறகு மீண்டும் நசுக்கி இருக்கிறார். அப்படி என்றால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு இருந்திருக்கிறது. இதற்கு 307 தானே போட வேண்டும். இன்னும் இரண்டு நிமிடங்கள் நசுக்கி இருந்தால் அவன் இறந்திருப்பான். இதுவரைக்கும் அவனால் நடக்க முடியவில்லை. அதேபோல் மாரியப்பன் நடந்து கொண்டே இருக்கிறான் உட்கார முடியவில்லை. எந்த அளவிற்கு கொடுமை நடந்து இருக்கிறது என்று பாருங்கள்.
அருண் என்பவரின் அப்பா இபி ஆபிசர். சப்-கலெக்டரும் ஏ.எஸ்.பியும் ஒன்றாக பாபநாசம் மலைமேல் போவார்களாம். அவர்கள் இருவரும் அதிகார தொனியில் இவரை கதவை திறக்கச் சொல்வது, அணையை சுற்றி காண்பிக்க சொல்வது. இபியில் வேலை பார்ப்பதால் வாராவாரம் இதே கூத்துதான் நடந்திருக்கிறது. அவரது மகனை அடிக்கும் பொழுது இவர் வெளியே நின்று இருக்கிறார். சார், அது என்னுடைய மகன் என்ற பிறகு தான் பல்லை பிடுங்கி இருக்கிறார்கள். இதில் சப்-கலெக்டரையே விசாரணை அதிகாரியாக போட்டு இருக்காங்க பாருங்க.. அதுதான் ஜனநாயகக் கேலிக்கூத்து.
முதல் கட்டமாக இப்பொழுதுதான் உருப்படியான நடவடிக்கையை அரசு எடுத்து இருக்கிறது. முழுக்க நனைஞ்சாச்சு இதுக்கு மேல எதுக்கு முக்காடு. 307 போட்டுவிட வேண்டியதுதானே. மழுப்பலான விஷயங்கள்தான் தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. சப்-கலெக்டரை விசாரணை அதிகாரியாக போடுவது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் 25 நாள் கழித்து அமுதா ஐ.ஏ.எஸ்ஸை கொண்டு வருவது. அவர்கள் விசாரணை தொடங்கிய நேரத்தில் எஃப்.ஐ.ஆர் போடுவது. முதலிலேயே எஃப்.ஐ.ஆர் போட்டிருந்தார்கள் என்றால் இந்த கலவரங்கள் தேவையே கிடையாது. இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் முழுமையாக நாங்கள் கொடுத்த புகார் படி பூர்த்தி செய்யப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகாரின் படி 307 சேர்த்து போடப்பட்டிருக்க வேண்டும்'' என்றார்.