தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பல்வேறு விவசாய சங்கத்தினர் மண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் (29.09.2023) இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளி பகுதியில் தற்போது போராட்டம் துவங்கியுள்ளது. கர்நாடகாவின் 'ஜெய் கர்நாடகா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அத்திப்பள்ளி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஜெய் கர்நாடக அமைப்பைச் சார்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு எல்லையான ஜூஜூவாடி பகுதியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. சேலம் கோட்டத்தில் இருந்து 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 80 பேருந்துகள் என மொத்தம் 430 பேருந்துகள் நேற்று இரவே தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. எந்த பேருந்தும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவில் நுழைய முடியவில்லை. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். அவசர தேவைகளுக்காக, மருத்துவ சேவைகளுக்காக வருபவர்கள் வாகனத்தை மட்டும் வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்து கொண்டு கர்நாடகாவிற்குள் அனுப்பி வருகின்றனர் போலீசார்.